Tamilசினிமா

வைரமுத்து மீது தொடர் பாலியல் புகார்கள் கூறும் சின்மயி – பிரபலங்கள் ஆதரவு

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியாமேனன்.

இவர் தனது டுவிட்டரில் “பாடலாசிரியர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார்” என்று தகவல் வெளியிட்டு இருந்தார். இதை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

உடனே பெயர் குறிப்பிடாத பெண்ணின் தகவலை எப்படி நீங்கள் நம்பலாம் என்று சின்மயிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இது உண்மை தான். நம்புங்கள் என்று பதில் அளித்த சின்மயி இறுதியில் தானே வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என்று டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.

சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பான “விழமாட்டோம்” என்ற நிகழ்ச்சியில் பாடுவதற்காக நான் சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்ட நிலையில் என்னையும், எனது தாயையும் மட்டும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் இருக்கச்சொன்னார்.

எதற்கு என்று கேட்ட போது, வைரமுத்துவை ஓட்டலில் போய் பாருங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். நாங்கள் கோபத்துடன் மறுத்துவிட்டு உடனே இந்தியா திரும்பிவிட்டோம்.

இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக சின்மயி அளித்த பேட்டியில் கவிஞர் வைரமுத்து அவரது அலுவலகத்தில் 2 பெண்களை முத்தமிட முயற்சித்தார். என்னைப் போல பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் பேசுவார்கள்.

வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். விளம்பரத்துக்காக இதை நான் சொல்லவில்லை, இதனால் எனக்கு இனிமேல் பாடவாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை என்றார்.

மேலும் சின்மயி கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து எழுதிய கவிதை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் மறுத்துவிட்டேன். இதனால் என்னை அரசியல்வாதியைப் பற்றி தரக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன்” என மிரட்டியதாக கூறினார்.

முதலில் இதற்கு பதில் அளிக்காமல் மவுனம் காத்த கவிஞர் வைரமுத்து இப்போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரீகம் நாடெங்கும் இப்போது நாகரீகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை, உண்மையை காலம் சொல்லும்” என பதிவிட்டு இருக்கிறார்.

வைரமுத்து பதில் அளித்த சில நிமிடங்களிலேயே, “அவர் ஒரு பொய்யர்” என சின்மயி தனது டுவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையில் சின்மயிக்கு ஆதரவாக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த், நடிகை ஸ்ரீரெட்டி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக நடிகைகள் ஆன்ட்ரியா, சமந்தா, வரலட்சுமி, இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆன்ட்ரியா கருத்து:– பாலியல் தொல்லை என்ற குற்றச்சாட்டை ஒழித்து பெண்கள் அனைவரும் நிம்மதியாக வாழும் நிலை ஏற்படவேண்டும்.

குற்றம் செய்பவர்களுக்கு தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் ஏற்படவேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்போ 50 ஆண்டுகளுக்கு முன்போ தவறு தவறு தான்.

இசை அமைப்பாளர் ஜிப்ரான்:- சின்மயி நான் உங்களை மதிக்கிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். நன்றி.

சமந்தா:- சின்மயியையும் அவரது கணவர் ராகுலையும் எனக்கு 10 வருடங்களாக தெரியும். அவர் கூறுவது உண்மை தான். சின்மயி உறுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வரலட்சுமி:- முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பெண்கள் பேசுவது வரவேற்கத்தக்கது. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும்.

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்து இருப்பதை சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சுரேஷ் மறுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு படைப்பாளர் மீது குற்றம் சாட்டும் சின்மயி மீது உலகத்தமிழர்கள் கோபத்தில் உள்ளனர். சின்மயியும் அவரது தாயும் என்னுடைய இல்லத்தில் தான் தங்கினார்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்துவதை சின்மயி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *