தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கியது

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழா என்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறைகள் முற்றிலும் புதுப்பித்து கட்டப்பட்டன. தூத்துக்குடியில் முறப்பநாடு தலத்தில் படித்துறைகள் சீரமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு படித்துறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு புஷ்கர விழாவிற்கு தயார்படுத்தப்பட்டன.

இதையடுத்து மகா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் மகா புஷ்கர விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தாமிரபரணி நதியை வணங்கி புனித நீராடி மகிழ்ந்தனர்.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகி பங்கேற்க உள்ளார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடும் கவர்னர் பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெறுகின்றன.

மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கவர்னர் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்த கட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நதிக் கரையில் 144 அடியில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. .

ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்படுகிறது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு வேத பண்டிதர்களும் வந்துள்ளனர். படித்துறையில் 7 அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி மாவட்டத்தில் பக்தர்கள் நீராடுவதற்காக 29 படித்துறைகள் கண்டறியப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மகா புஷ்கர விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற 90 போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மீட்பு பணிக்காக படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 22-ம் தேதி வரை புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *