Tamilசெய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு மத்திய அரசின் நாடகம் – தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. அதில் ரூ.1.50 மத்திய கலால் வரியில் குறைப்பதாகவும் மீதமுள்ள ஒரு ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமாறும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம். மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முன் வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் பத்து ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது பங்கிலிருந்து ரூ1.50 குறைப்பதாக சொல்வது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆடப்படும் மோசடி நாடகம்.

கர்நாடகா தேர்தலின் போது ஒரு மாதத்துக்கும் மேல் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துவிட்டு தேர்தல் முடிந்ததும் ஒரேயடியாக பாஜக அரசு உயர்த்தியது. அந்த துரோகத்தை மக்கள் மறக்கவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராமல் இருக்கும் போது மக்களிடம் அநியாய வரிவிதிப்பின் மூலம் மோடி அரசு பகல் கொள்ளை அடிக்கிறது.

ஏழை-எளிய மக்களிடம் வரி என்ற பெயரில் வழிப்பறி செய்து கார்ப்பரேட்டுகளின் கடன்கள் தள்ளுபடி செய்ய அதைப் பயன்படுத்துகிறது. கடந்த 4 ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் 3.16லட்சம் கோடி கடன்கள் கார்ப்பரேட்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் – டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் கொள்கையைக் கைவிட்டு சர்வதேச விலைக்கு ஏற்றபடி அவ்வப்போது அரசாங்கமே விலை நிர்ணயம் செய்துகொள்ளும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *