Tamilவிளையாட்டு

கோலி, ரோஹித் நின்றுவிட்டால் அவர்களை வீழ்த்துவது கடினம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 106 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. ரோகித் சர்மா (ஆட்டம் இழக்காமல் 152 ரன்கள்), கேப்டன் விராட்கோலி (140 ரன்கள்) ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விராட்கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் முறையான கிரிக்கெட் ஷாட்களை ஆடினார்கள். அவர்கள் எதிரணியினருக்கு வாய்ப்பு எதுவும் அளிக்காத வகையில் விளையாடினார்கள். அளவுக்கு அதிகமான ஆக்ரோஷத்துடன் ஷாட்களை அடிக்கவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தபடி நல்ல உத்வேகத்துடன் விளையாடினார்கள். அவர்கள் இருவரும் நிலைத்து நின்று விட்டால் அவர்களுக்கு பந்து வீசுவதும், விக்கெட்டை வீழ்த்துவதும் மிகவும் கடினமானதாகும். மைதானத்தில் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டியடித்தனர்.

நாங்கள் பந்து வீசுகையிலும் பிட்ச்சில் பந்து சுழலவில்லை. ஸ்டம்பை குறிவைத்து பந்து வீசி ரன் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்த முயற்சித்தேன். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமாக இல்லை. 2-வது பேட்டிங் செய்கையில் ஆடுகளத்தின் தன்மை எப்படி? இருக்கும் என்பது முதலில் தெரியவில்லை. ஆனால் கடைசி வரை ஒரே தன்மையுடன் தான் ஆடுகளம் இருந்தது. ஷிகர் தவான் விரைவில் ஆட்டம் இழந்தாலும், விராட்கோலி, ரோகித் சர்மா இணை ஆட்டம் எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. வேகப்பந்து வீச்சிலும், சுழற்பந்து வீச்சிலும் பந்து சுழலவில்லை என்பதால் ரன் இலக்கை சேசிங் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

இவ்வாறு ரவீந்திர ஜடேஜா கூறினார்.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *