ஆசிய கோப்பை கிரிக்கெட் – 7 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி இந்தியா 7 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேசம் அணிகள் மோதின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.

சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தோனி – தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.

இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.

ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *