Tamilசெய்திகள்

வங்கி கணக்கு தொடங்க ஆதார் அவசியம் இல்லை – உச்ச நீதிமன்றம்

வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் வலுவூட்டுவதுடன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அளிக்கிறது. ஆதாரை போலியாக தயாரிக்க முடியாது. எனவே, இது மற்ற அடையாள அட்டைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. அரசியல் சாசனத்தின்படி ஆதார் செல்லுபடியாகும். ஆனால் அதில் சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆதார் எண்களை தனியார் நிறுவனங்கள், செல்போன் நிறுவனங்கள் கோர முடியாது. தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும். ஆதார் தரவுகளை பாதுகாக்க உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும்.

புதிய வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை. யுஜிசி, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம். பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். ஆதார் தகவல்களை வெளிநாட்டில் இருந்து திருட வாய்ப்பு இல்லை. ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமை பாதிக்கப்படக் கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *