85 வயதில் முதல் முறையாக வாக்களிக்கும் விறகு வெட்டும் தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 85). விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார்.

இவரது மகள் கருப்பாயி (55), மருமகன் தேவராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பாபு (35), பிரபு (32) என்ற மகன்களும், காமாட்சி, ராதிகா என்ற மருமகள்களும் உள்ளனர். இவர்களுடன் ராதிகாவின் தந்தை ராஜேந்திரன் (35) வசித்து வருகிறார்.

கன்னியப்பன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமலும், வாக்கு செலுத்தாமலும் இருந்ததாக தெரிகிறது. விறகு வெட்டும் தொழில் செய்யும் இவர்கள் வீரம்பாக்கம் புதூர் கிராமத்தில் கடந்த 13 வருடமாக இருந்தனர். இவர்களை கடந்த 2016ம் ஆண்டு மீட்டு சொந்த கிராமமான மருதாடு கிராமத்தில் தங்கவைத்தனர்.

இவர்கள் கொத்தடிமைகளாக ஆங்காங்கே தங்கி வேலை செய்து வந்ததால் இவர்கள் இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் வாக்களிக்காமலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமலும் இருந்து வந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு நாளை மறுதினம் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர்.

85 வயதில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் தொழிலாளி உள்பட 7 பேரிடமும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கலெக்டர் கந்தசாமி நேரடியாக மருதாடு கிராமம் சென்று அடையாள அட்டை வழங்கி செயல் விளக்கம் அளித்து காட்டினார். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பெயர், கட்சி, வரிசை எண், வேட்பாளர் படம், சின்னம் உள்ளிட்டவைகள் குறித்து கூறினார்.

அப்போது கன்னியப்பன் தனக்கு படிக்க தெரியாது என்றார். உடனே வேட்பாளர் படம் பார்த்து வாக்களிப்பீர்களா என கலெக்டர் கேட்டதற்கு, நான் இதுவரை சினிமா படம் பார்த்தது இல்லை என்றும் கன்னியப்பன் கூறினார்.

அப்போது கலெக்டர் சினிமா படம் இல்லை இந்த எந்திரத்தில் உள்ள வேட்பாளர் படம் என கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

வந்தவாசி மருதாடு கிராமத்தில் வசித்து வரும் 85 வயது முதியவர் கன்னியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 ஆண்டுக்கு முன்னர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பதற்கு வாக்காளர் பட்டியலில் வந்தவாசி வட்டத்தில் 7 பேரும், போளூர் வட்டத்தில் 10 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதுநாள் வரை வாக்களித்தது கிடையாது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப் பதிவு நாள் அன்று பகல் நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு, வெயிலில் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வரிசைப்படி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அதிகமாக உள்ள 240 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக காலை 11 மணிக்கு ஒரு பொது இடத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சேர்ந்து சிறப்பு வாகனம் மூலம் வாக்களிக்க அழைத்து வரப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்குச் சாவடிகளில் சிறப்பு பணியாளர்கள் கொண்டு சக்கர நாற்காலி மூலம் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *