3வது ஒரு நாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இன்று மோதல்

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. இருப்பினும் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் 323 ரன்கள் இலக்கை எளிதில் விரட்டிப்பிடித்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் தட்டுத் தடுமாறி தோல்வியில் இருந்து தப்பித்தது. இரண்டு ஆட்டத்திலும் இந்திய பவுலர்கள் 320 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இதையடுத்து ஓய்வில் இருந்த நட்சத்திர பவுலர்கள் புவனேஷ்வர்குமாரும், ஜஸ்பிரித் பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களது வருகை நிச்சயம் இந்திய அணிக்கு அனுகூலமாக இருக்கும் என்று நம்பலாம்.

முதல் 2 ஆட்டங்களிலும் சதம் நொறுக்கிய இந்திய கேப்டன் விராட் கோலி, ‘ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். அவர் மறுபடியும் மூன்று இலக்கத்தை தொட்டால் இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 4 இன்னிங்சில் சதம் அடித்துள்ள தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சின் சாதனையை சமன் செய்ய முடியும்.

டெஸ்ட் தொடரில் சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாள் தொடரில் எழுச்சி பெற்றுள்ளது. இளம் வீரர் ஹெட்மயர் இரண்டு ஆட்டத்திலும் (106 ரன், 94 ரன்) இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கி விட்டார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் முந்தைய ஆட்டத்தில் செஞ்சுரி போட்டார். மூத்த வீரர் சாமுவேல்சும் பார்முக்கு திரும்பினால், வெஸ்ட் இண்டீசின் பேட்டிங் வரிசை மேலும் வலுவடையும். இதே போல் பந்து வீச்சிலும் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் மிரட்டினால் ஆட்டம் சவால் நிறைந்ததாக மாறும்.

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தடை காரணமாக முதல் இரண்டு ஆட்டத்திலும் வீரர்களின் ஓய்வறையை தவற விட்டது ஏமாற்றம் அளித்தது. எங்களது வீரர்கள் பேட்டிங்கில் பிரமாதப்படுத்தியதன் விளைவு, இரண்டு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை மீண்டும் அழைக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதற்காக பேட்ஸ்மேன்களை பாராட்டுகிறேன். விராட் கோலி அற்புதமான வீரர். அவரின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு திட்டம் வகுத்துள்ளோம்’ என்றார்.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும் (இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவித்த போதிலும், அதை இந்தியா சேசிங் செய்து சாதனை படைத்தது. எனவே ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.

மொத்தத்தில் இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் களத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டிக்கான இரண்டு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ், ஒஷானே தாமஸ் அல்லது ஒபேட் மெக்கோய், தேவேந்திர பிஷூ, கெமார் ரோச்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *