Tamilசினிமாதிரை விமர்சனம்

வெள்ளைப்பூக்கள்- திரைப்பட விமர்சனம்

அமெரிக்க தமிழர்களான திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில், விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ எப்படி என்பதை பார்ப்போம்.

காமெடி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்த விவேக், கதையின் நாயகனாக நடித்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான விவேக், அமெரிக்காவில் இருக்கும் தனது மகனைப் பார்க்க அமெரிக்காவுக்கு செல்கிறார். அவரது மகனின் வீடு இருக்கும் பகுதியில் திடீரென சிலர் கடத்தப்படுகிறார்கள். அந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீஸ் விசாரணை நடத்தினாலும், போலீஸான விவேக்கும் தனது பாணியில் அச்சம்பவங்கள் குறித்து புலனாய்வு செய்ய, விவேக்கின் மகனும் கடத்தப்பட்டு விடுகிறார்.

மகனை பறிக்கொடுத்த விவேக், தனது போலீஸ் மூளையினால் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதோடு, அதை யார் செய்கிறார்கள், எதற்காக செய்கிறார்கள், என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையை படித்தவுடன், வேறு எதாவது படம் உங்கள் நினைவுக்கு வரலாம், அது சகஜம் தான். ஆனால், கதை தான் அப்படியே தவிர, படமாக்கிய விதம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. குறிப்பாக கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவரின் கடந்தகால வாழ்க்கையை பிளாஷ்பேக்காக சொல்லாமல், நிகழ்காலத்தோடு இணைத்து சொல்லியிருக்கும் விதம், படத்தின் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக இருப்பதோடு, திரைக்கதைக்கு சுவாரஸ்யத்தையும் கொடுத்திருக்கிறது.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்தாலும், காமெடிப் படங்களாகவே நடித்து வருவது தான் வழக்கம். ஆனால், விவேக் தனது காமெடி முகமூடியை கழட்டி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க கதையின் நாயகனாகவே வலம் வருகிறார். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் வீரியத்தோடும், மகன் மீது பாசம் வைத்திருக்கும் தந்தையின் செண்டிமெண்ட்டோடும் தனது கதாபாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார்.

விவேக்கின் மகனாக நடித்திருக்கும் தேவ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அமெரிக்க பெண், பூஜா தேவரியா என படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்கள் கூட கவனிக்க வைக்கிறார்கள்.

விவேக்கின் நண்பராக நடித்திருக்கும் சார்லி, சில இடங்களில் சின்ன சின்ன நகைச்சுவை மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார்.

வசனமே பேசாமல், நடவடிக்கைகள் மூலம் நம்மை பயமுறுத்தும் அந்த அமெரிக்க நடிகரின் தோற்றம் சாதாரணமாக இருந்தாலும், அவரது ஸ்கிரீன் பிரஸன்ஸ் மிரட்டலாக இருக்கிறது.

பல படங்களில் அமெரிக்காவை பல கோணங்களில் காட்டியிருந்தாலும், இதுவரை யாரம் காட்டாத ஒரு அமெரிக்காவை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள். சிட்டியை தாண்டிய ஒரு பகுதியாக இருக்கும் அப்பகுதியின் அமைதியான சூழலின் அபாயத்தையும், அழகியலையும் ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர் ஒருசேர காட்டுகிறார்.

ராம்கோபால் கிருஷ்ணராஜுவின் பின்னணி இசை திரைக்கதையை உணர்ந்து பயணித்திருக்கிறது. குறிப்பிட்டு இசை குறித்து பேசும் அளவுக்கு இல்லை என்றாலும், காட்சிகளை சிதைக்காமல் இசையமைத்திருப்பதற்காகவே இசையமைப்பாளரை பாராட்டலாம்.

புது குழுவினர், தங்களது புதிய முயற்சியோடு எடுத்திருக்கும் இப்படத்தின் கதை ரெகுலராக இருந்தாலும், திரைக்கதையும் மேக்கிங்கும் புதிதாக இருக்கிறது.

படத்தில் ஹீரோயிஷம் இல்லை என்றாலும், ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, ஒரு க்ரைம் சம்பவங்களை எப்படி அனுகுவாறோ அந்த ரீதியில் இயக்குநர் விவேக் இளங்கோவன் திரைக்கதையை நகர்த்தி செல்கிறார். தொடர் கடத்தலை செய்வது யாராக இருக்கும், என்று படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் மீது நமக்கு சந்தேகம் ஏற்பட வைக்கும் இயக்குநர், இறுதிவரை உண்மையான குற்றவாளி மீது நமக்கு சந்தேகம் ஏற்படாமல் திரைக்கதையை படு சஸ்பென்ஸாக நகர்த்தி செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

சமூகத்தில் தொடர்ந்து நடக்கும் குற்றங்களுக்கு, இப்படி ஒரு தண்டனை தான் சரி, என்று படம் பார்ப்பவர்களை நினைக்க வைக்கும், ஒரு சோசியல் மெசஜோடு இப்படத்தை இயக்கியிருக்கும் விவேக் இளங்கோவன் சில இடங்களில் சில தவறுகளை செய்திருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘வெள்ளைப்பூக்கள்’ விறுவிறுப்பு குறைவான படமாக இருந்தாலும், ரசிகர்களின் பணத்தை வீணடிக்காத படமாகவே உள்ளது.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *