Tamilசினிமாதிரை விமர்சனம்

பிகில்- திரைப்பட விமர்சனம்

’தெறி’, ‘மெர்சல்’ என விஜயை வைத்து இரண்டு மெஹா ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர் அட்லீ, விஜயுடன் இணைந்திருக்கும் மூன்றாவது படமான ‘பிகில்’ அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததா, இல்லையா என்பதை பார்ப்போம்.

வட சென்னை வாசியான விஜய், தனது ஏரியா பிள்ளைகள் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவதோடு அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்க, அவருக்கு ரவுடி என்ற முத்திரை குத்தப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளரான கதிர், வில்லன்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராட, முக்கியமான போட்டியில் பயிற்சியாளர் இல்லாமல் தமிழ்நாட்டு பெண்கள் கால்பந்தாட்ட அணி திணறுகிறது. அந்த நேரத்தில் கதிர், தனது நண்பரான விஜயை பயிற்சியாளராக போக சொல்கிறார். ரவுடியான விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளரா! என்று அணி நிர்வாகிகள் மட்டும் இன்றி படம் பார்க்கும் நமக்கும் ஷாக்கடிக்க, அப்போது தான் விஜயின் தந்தையான ராயப்பனின் பிளாஷ்பேக் ஓபன் ஆக, அதில் மைக்கேல் யார்? அவர் எப்படி ரவுடி ஆனார்? என்ற கதையும் விவரிக்கப்படுகிறது. அதன் பிறகு பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராகவும் விஜய், அவர்களை வெற்றி பெற செய்வதோடு, தனது ஏரியா பிள்ளைகளுக்கு தொள்ளை கொடுக்கும் வில்லன்களை எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் படத்தின் கதை.

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம், பிரம்மாண்டமான செட், கலர்புல் காட்சிள் என்று படத்தில் ஏகப்பட்ட அம்ஷங்கள் இருந்தாலும், ரசிகர்களின் கண்களில் நிறைந்திருப்பது விஜய் என்ற ஒற்றை மனிதர் தான்.

ராயப்பன் மற்றும் மைக்கேல் என்று அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய், மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் வேடத்தில் மிரட்டியிருக்கிறார். இளசுகளை கவரும் காதல், காமெடி என்று அசத்துபவர், ரவுடி ராயப்பனாக வரும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சியை காட்டினாலும், அவரது தோற்றத்தில் இளமை ஊஞ்சலாடுகிறது. விஜயை கல்லூரி மாணவர் என்றால் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், அவரை வயதான அப்பா வேடத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது.

நயன்தாரா கமர்ஷியல் ஹீரோயின் போல வருகிறாரே தவிர பெரிதாக ஒன்றுமில்லை. கதிர், ஆனந்தராஜ் ஆகியோர் எதற்காக என்றே தெரியவில்லை. வில்லன்களான ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜியின் நடிப்பு மிரட்டல்.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் படம் கலர்புல்லாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது. பின்னணி இசையில் மாஸ் எப்பிசோட் சொல்லும்படி இல்லை என்றாலும் செண்டிமெண்ட் ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது. ரூபனின் கத்திரிக்கு அதிகமான வேலை இருந்தும், அவர் அசால்டாக வேலை பார்த்திருக்கிறார்.

விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் அட்லீ, சினிமா ரசிகர்களை மனதில் வைத்து படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். இரண்டு கதாபாத்திரம் என்றாலும் இரண்டுமே விஜய் தான் என்பதை மறந்தது போல, இயக்குநர் அட்லீ திரைக்கதை அமைத்திருக்கிறார். இருந்தாலும், இரண்டாவது பாதியில் சற்று சுதாரித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் அட்லீ, திரைக்கதையில் விறுவிறுப்பை சேர்ப்பதோடு, விஜய் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் படத்தை நகர்த்திச் செல்கிறார்.

படத்தில் காட்டப்பட்ட கால்பந்தாட்டத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் கால்பந்தாட்ட வீரராக களம் இறங்கும் போது ஏற்படும் எதிர்ப்பார்ப்பு, கால்பந்தாட்ட போட்டிகளில் இல்லாமல் போகிறது. காரணம், கால்பந்தாட்ட போட்டியில் இருக்கும் விறுவிறுப்பைக் காட்டாலும், கோல் அடிப்பதை மட்டுமே காட்டுவது தான்.

விஜய் விளையாட்டு வீரராக இருக்கும் போது போட்டிகளில் இல்லாத விறுவிறுப்பு அவர் பயிற்சியாளராக களம் இறங்கும் போது படம் முழுவதும் நிறைந்துவிடுகிறது. தோற்கும் நிலையில் இருக்கும் தனது அணியினருக்கு வெறித்தனத்தை கொடுக்க விஜய் கடைபிடிக்கும் டெக்னிக் ரசிக்க வைக்கிறது.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், விஜயின் பர்பாமன்ஸ் போன்றவை படத்தில் இருக்கும் குறைகளை மறைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளது.

விஜய் படம் என்றால் மக்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்களோ அதை நிறைவாக இப்படத்தில் இயக்குநர் அட்லீ வைத்திருந்தாலும், ’தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களுடன் ஒப்பிடும் போது ‘பிகில்’ சுமார் ரகம் தான்.

மொத்தத்தில், விஜய் ரசிகர்களால் சத்தமாக கொண்டாட முடியாத படமாகவே இருக்கிறது இந்த ‘பிகில்’.

-ரேட்டிங் 2.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *