Tamilசெய்திகள்

பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியான நடவடிக்கை! – இந்தியா அதிரடி

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

‘பாகிஸ்தானின் நோக்கத்துக்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். உலகின் மிகப்பெரிய நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சதிகாரர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இது புதிய இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் உலக நாடுகளின் உதவிக்காக நாடுநாடாக ஏறி, இறங்கி வருகிறது’ என உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலால் இந்தியர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி நேற்றிரவு அறிவித்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்துக்கு புல்வாமா தாக்குதலில் உள்ள தொடர்புகளை சர்வதேச நிதி நடவடிக்கை குழுவிடம் முறையீடு செய்ய இந்திய அரசு தீர்மானித்துள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச நிதி நடவடிக்கை குழுவின் முக்கிய சீராய்வு ஆலோசனை கூட்டம் இன்றிலிருந்து வரும் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் உரிய ஆதாரங்களுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா புகார் அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இனி உலக வங்கி, ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் வங்கி ஆகியவற்றில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் இருந்து இயங்கிவரும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு ஏற்கனவே பாகிஸ்தானை கரும்புள்ளி குத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *