Tamilவிளையாட்டு

கேப்டன்ஷிப்பில் முன்மாதிரியாக இருக்கிறார் – ரவிசாஸ்திரி பாராட்டு

தென்ஆப்பிரிக்காவை பந்தாடிய பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:-

உலகின் எந்த இடத்தில் விளையாடினாலும் ஆடுகளம் பற்றி கவலைப்படுவதில்லை. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது தான் தேவை. அதில் தான் எப்போதும் கவனம் செலுத்துகிறோம். நம்மிடம் உள்ள பேட்டிங் கிளிக் ஆகி, பந்து வீச்சாளர்களும் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தும் போது பெராரி கார் போல் நமது அணியும் பட்டைய கிளப்பும்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் வெற்றி, கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன். வழக்கமாக இந்தியாவில் நடக்கும் தொடர்களில் ஒன்றிரண்டு வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்த தொடரில் 6-7 வீரர்கள் பிரகாசித்துள்ளனர். இரட்டை சதம் அடித்த கேப்டன் விராட் கோலி, கேப்டன்ஷிப்பில் முன்மாதிரியாக இருக்கிறார். தொடக்க வீரர்கள் இருவரும் இரட்டை சதம் அடித்துள்ளனர். மிடில் வரிசையில் ரஹானே செஞ்சுரி போட்டார். புஜாரா, ஜடேஜா தங்களது பங்களிப்பை அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினர். இந்த மாதிரி ஒருங்கிணைந்த பங்களிப்பைத் தான் இந்திய அணி விரும்புகிறது.

புதுமுக சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீமின் பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. அவர் முதல் விக்கெட் வீழ்த்திய போது, அதை பிஷன்சிங் பெடி பார்த்து இருந்தால் அற்புதம் என்று கொண்டாடியிருப்பார் என்று கூறினேன். அந்த அளவுக்கு அவரது இடக்கை சுழற்பந்து வீச்சு ஆக்‌ஷன் அருமையாக இருக்கிறது. பதற்றமின்றி தொடங்கிய அவர் முதல் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் ஒவ்வொரு பந்தும் மிரட்டின. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் 4 விக்கெட்டுகளுடன் நதீம் தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கி இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *