Tamilசெய்திகள்

அதிமுக ஆட்சி கொலைகார ஆட்சி! – மு.க.ஸ்டாலின் காட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க. சார்பில் ‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். கிராமங்கள் தான் கோவில். நான் பக்தனாக இங்கு வந்திருக்கிறேன். நாங்கள் உங்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டு அதனை விரைவில் தீர்த்து வைக்க உறுதியோடு வந்திருக்கிறோம்.

நான் எனது கொளத்தூர் தொகுதிக்கு வாரம் ஒருமுறை சென்று மக்களை சந்தித்து வருகிறேன். சீவூர் ஊராட்சியில் உள்ள இந்த குடியாத்தம் தொகுதி, எம்.எல்.ஏ. இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது. அ.தி.மு.க.வின் பங்காளி சண்டையால் எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியை பற்றி பேச 1 வருடமாக எம்.எல்.ஏ. இல்லை.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. வருகிற ஏப்ரல், மே மாதம் நிச்சயம் வந்துவிடும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருமோ என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் அதில் தி.மு.க. வெற்றி பெறும் என்பதால்தான் தள்ளிபோட்டு வருகிறார்கள்.

சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 117 இடம் வேண்டும். தற்போது அ.தி.மு.க.வின் பலம் 113 ஆக மைனாரிட்டியாக உள்ளது. 10 நாளில் 11 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வர உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் பேரை சொல்லி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் இறப்பு மர்மமாக உள்ளது. இதனை விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என அ.தி.மு.க.வின் சட்டத்துறை அமைச்சரே கேட்கிறார். கோடநாடு கொலை சம்பவத்தில் முதல்-அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இந்த ஆட்சி லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என எங்களை விட பொதுமக்களான உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை வந்துள்ளது. தமிழக அரசுக்கு முட்டு கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது. தேர்தலுக்காக தமிழகத்திற்கு மோடி வந்து செல்கிறார். தேர்தல் வாக்குறுதியில் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறியவர்கள் 15 ரூபாய் கூட வழங்கவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலை நல்ல வாய்ப்பாக பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *