Tamilசெய்திகள்

வெனிசுலா நாட்டில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சி! – ராணுவ வீரர்கள் கைது

வெனிசுலா நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்தது. பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் தேர்தலில் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அவரது வெற்றியை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.

அதேசமயம் பாராளுமன்றத்தில் முழுவதுமாக எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால், நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அதிபர் ஆவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அத்துடன் மதுரோவுக்கு எதிரான தங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அதில் பேசிய ஒரு வீரர், ‘தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த நாங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளோம். எனவே, உங்கள் உதவி தேவை. தெருவில் இறங்கி போராட்டம் நடத்துங்கள்’ என கேட்டுக்கொண்டார்.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில், சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு காரகாசில் உள்ள கோட்டிசா பகுதியில் உள்ள முகாமில், கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை பாதுகாப்புத்துறை மந்திரி விளாடிமிர் பத்ரினோ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட வீரர்களிடம் இருந்து திருட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கிளர்ச்சியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

கிளர்ச்சியாளர்கள் கோட்டிசா முகாமிற்கு செல்லும் முன்பு, பெட்டாரே பகுதியில் உள்ள முகாமில் இருந்து ஆயுதங்களை திருடிச் சென்றதாகவும், 4 வீரர்களை கடத்திச் சென்றதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *