Tamilசெய்திகள்

ரெயில் போக்குவரத்து தொடங்கியது – டெல்லியில் இருந்து 3,461 பேர் புறப்பட்டார்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாத இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல கடந்த 1-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வழக்கமான ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் நேற்று முதல் குறிப்பிட்ட நகரங்களுக்கு ரெயில்கள் இயங்கின. இதனால் 50 நாட்களுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு 1,122 பயணிகளுடன் மாலை 4.45 மணிக்கு ரெயில் புறப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு மாலை 5.30 மணிக்கு ஒரு புறப்பட்டது. அதில், 1,177 பயணிகள் சென்றனர். இரவு 9.15 மணிக்கு பெங்களூருவுக்கு ஒரு ரெயில் புறப்பட்டது. அதில், 1,162 பயணிகள் சென்றனர். ஆக மொத்தம், டெல்லியில் இருந்து 3 ஆயிரத்து 461 பயணிகள் புறப்பட்டுள்ளனர்.

இதுபோல், மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா, பீகார் மாநிலம் ராஜேந்திர நகர், பெங்களூரு, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து டெல்லிக்கு 5 ரெயில்கள் புறப்பட்டன.

உறுதி செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் நுழைய வேண்டும் என்று ஏற்கனவே ரெயில்வே துறை அறிவித்திருந்தது. அதன்படி, டிக்கெட்டை பரிசோதித்த பிறகே பயணிகளை உள்ளே அனுமதித்தனர்.

உடல் வெப்ப பரிசோதனைக்காக ரெயில் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பே பயணிகள் வந்தனர். ஒரு நுழைவாயில் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

நுழைவாயிலில் கிருமிநாசினி எந்திரம் பொருத்தப்பட்டு இருந்தது. அதில் கையை கழுவிய பிறகே நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட பணி காரணமாக வெளியூர் சென்றபோது, அங்கு சிக்கிக் கொண்டவர்கள், 50 நாட்களுக்கு பிறகு தங்கள் குடும்பத்தினரை சந்திக்க சொந்த ஊர் செல்லும் ஆவலில் உற்சாகமாக பயணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *