ரிஷப் பந்த் தனது ஆட்டத்தை மாற்ற வேண்டும் – ரவிசாஸ்திரி

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான அணியை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் முனைப்பு காட்டியுள்ளது. உலகக்கோப்பைக்கு முன் முப்பது டி20 போட்டிகளில் மட்டுமே உள்ளதால், அதற்குள் முடிந்தவரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களது திறமையை அறிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி விரும்புகின்றனர்.

விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்த்-ஐ தேர்வு செய்துள்ளனர். அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிஷப் பந்தின் ஷாட் செலக்சன் சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுகிறது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கவலையை தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ”டிரினிடாட்டில் நடைபெற்ற போட்டியில் அவர் ஷாட்டை பார்த்தீர்கள் என்றால், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அந்த ஷாட் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டு மூன்று முறை அதேபோன்று முயற்சி செய்து அவுட்டாகியுள்ளார்.

உங்களது ஷாட் செலக்சன் அணியை தோல்வி நிலைக்கு கொண்டு செல்லும், உங்களை அது கீழ்நோக்கி கொண்டு செல்வதை மறந்து விடுகிறீர்கள் என்பது குறித்து வலியுறுத்தப்படும். ஒருமுனையில் விராட் கோலி நிலையாக நின்று கொண்டிருக்கும்போது, மறுமுனையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார்.

அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.3 ஓவரில் 164 ரன்கள் தேவைப்பட்டது. அப்படி ஆட்டமிழக்கும்போது அணிக்கு பாதகமான நிலை ஏற்படுகிறது. உங்களுடைய இலக்கு களத்தில் நின்று போட்டியை சிறப்பாக முடித்து வைக்க சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது.

யாருமே தனது பாணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், போட்டி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். சில குறிப்பிட்ட தருணங்களில் ஷாட் செலக்சன் என்பது மிகவும் முக்கியமானது.

அதை ரிஷப் பந்த் புரிந்து கொள்ளாதவரை, அவரால் அதை தடுக்க முடியாது. இதை புரிந்து கொள்ள எத்தனை போட்டிகளில் ஆட வேண்டும் என்று கேட்கிறீர்கள். அது ஒரு போட்டியாக இருக்கலாம், நான்கு போட்டியாக இருக்கலாம். அதை தாண்டி இருக்குமென நான் கருதவில்லை. அவர் கற்றுக் கொள்வார். அவர் போதுமான அளவிற்கு ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார். இப்போது அவருக்கான நேரம் வந்துள்ளது. உலகரங்கில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை அவர் வெளிக்காட்ட வேண்டும்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் அவரது அணுகுமுறை மற்றும் வழக்கமான ஆட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது எதிர்பார்ப்பு அல்ல. ஆனால், சிறந்த முறையில் சூழ்நிலையில் புரிந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சூழ்நிலையை ஆராய்ந்து, அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சொந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும். கடினமான சூழ்நிலையில் ரிஷப் பந்தை போன்ற வீரர்கள் கடினமான சூழ்நிலையில் ஐந்து பவுண்டரிகள் விளாசுவார்கள். ஆனால், நான் அந்த சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு ரன்கள்தான் அடித்து எதிர்முனையில் நிலையாக நின்று கொள்வேன்.

ஆகவே, ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வழக்கமான ஆட்டங்கள் உண்டு. ஆனால். சூழ்நிலையை புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேணடும் என்பது அனைத்து வீரர்களிடம் இருந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதில் நானும் அடங்குவேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *