Tamilசெய்திகள்

மென்பொருள் நிறுவனம் தொடங்கிய 13 வயது சிறுவன்!

துபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் தான். ஆனால் இவரது வயதிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இப்போதே தனக்கென மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறான். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்றுபேர் பணியாற்றி வருகின்றனர்.

மூன்று பணியாளர்களும் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். தற்சமயம் நிறுவனங்களுக்கு வலைத்தளம் உருவாக்கி தரும் டிரைநென்ட் சொல்யூஷன்ஸ் அவர்கள் செய்யும் எந்த பணிக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை.

ஆதித்யன் ராஜேஷ் தனது ஐந்து வயதில் கம்ப்யூட்டர் பயன்படுத்த துவங்கியதே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு பயிலும் வயதிலேயே கணினி மீது ஆர்வம் அதிகரிக்க தனது ஒன்பதாவது வயதில் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டான்.

வீட்டில் போரடிக்கும் நேரத்தில் தனது முதல் செயலியை உருவாக்கிய ஆதித்யன், அதன் பின் நிறுவனங்களுக்கு லோகோ மற்றும் வலைத்தளங்களை உருவாக்கி கொடுக்க ஆரம்பித்தார். கேரளாவின் திருவில்லாவில் பிறந்த ஆதித்யன் தனது ஐந்து வயதில் துபாய் நாட்டிற்கு இடம்பெயர்ந்தான்.

நிறுவனத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய ஆதித்யன் 18 வயது வரை காத்திருக்க வேண்டும். எனினும், ஏற்கனவே டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று இயங்கி வருகிறது. இதுவரை 12 நிறுவனங்களுக்கு டிரைநெட் சொல்யூஷன்ஸ் சார்பில் வடிவமைப்பு மற்றும் குறியீடு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 7, 2017ம் ஆண்டில் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. தற்சமயம் ஏழாம் வகுப்பு பயிலும் ஆதித்யனுடன் டிரைநெட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்சமயம் ஆதித்யன் தனது பள்ளி ஆசிரியர்களுக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். இந்த செயலி ஆசிரியர்களின் பணியை பாதியாக குறைக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் என ஆதித்யன் தெரிவித்திருக்கிறான். மென்பொருள் நிறுவனம் தவிர யூடியூப் சேனல் மூலம் தனக்கு தெரிந்த தகவல்களை ஆதித்யன் வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *