மீண்டும் அணு ஆயுத சோதனை! – எச்சரிக்கை விடுத்த வட கொரியா

உலகின் இரு எதிர்எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசினர்.

வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட அனைத்து வகையான அணுஆயுத சோதனைகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரியா வாக்குறுதி அளித்தது.

அதன்படியே வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தியது. இதற்கு பிரதிபலனாக தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும் என வடகொரியா கோரிக்கை வைத்தது.

ஆனால் அமெரிக்காவோ, அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே பொருளாதார தடைகள் திரும்ப பெறப்படும் என்பதில் உறுதியாக உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்காவுடனான உறவில் பதற்றம் நீடிக்கும் சூழலில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் கிம் ஜாங் அன் 4 நாட்கள் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கிம் ஜாங் அன் முக்கிய முடிவுகளை அறிவித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தென்கொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு, தங்கள் பொருளாதார தடைகளை முடுக்கிவிட்டதால், வடகொரியா தாமாகவே அறிவித்த அணுஆயுத சோதனை தடைக்கு இனி கட்டுப்பட தேவை இல்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் மட்டும் அர்ப்பணிப்புடன் செயல்படுவது ஒரு தலைபட்சமானது. அதை நாம் இனியும் தொடருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

உலக அணுஆயுத குறைப்புக்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பொய்யாக்கப்பட்டு விட்டன. எனவே நாம் மீண்டும் அணுஆயுத சோதனைக்கு திரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வடகொரியாவில் இருந்து புதிய வகையிலான ஒரு அணு ஆயுதத்தை எதிர்காலத்தில் உலகம் காணும் என அவர் கூறினார். எனினும் அவர் புதிய அணுஆயுதம் தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிவிக்கவில்லை.

அணுஆயுத சோதனைக்கு திரும்புவதாக கிம் ஜாங் அன் கூறினாலும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கான கதவை மீண்டும் திறந்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் அணுகுமுறைகளை பொறுத்தே அணுஆயுத சோதனைகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *