Tamilசெய்திகள்

மரபுசாரா மின்சார உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக அதிகரிப்போம் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது, “பாரிஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தப்படி இந்தியா 1.75 லட்சம் மெகாவாட் அளவுக்கு மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்யும்” என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அதனை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெர்ரெஸ் ஏற்பாடு செய்திருந்த உலக பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்யாமல் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திடீரென இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

பருவநிலை மாற்றம் போன்ற தீவிரமான சவால்கள் வருகிறபோது அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் பணிகள் போதாது. இதற்காக பேசிக்கொண்டிருக்கும் நேரம் முடிந்துவிட்டது. உலகம் இப்போது செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு அவுன்ஸ் அளவுக்கான நடவடிக்கை ஒரு டன் அளவு அறிவுரைக்கு மேல் மதிப்புள்ளது.

நமது நடத்தையில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான இயக்கத்தை உலக மக்கள் இயக்கமாக நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நமது வளங்களை சிறப்பான முறையில் கையாள நமது தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இதுவே நாம் இயற்கைக்கு கொடுக்கும் மரியாதை.

2022-ம் ஆண்டுக்குள் நாங்கள் இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தியை 1.75 லட்சம் மெகாவாட் என்பதை மிஞ்சி 4 லட்சம் மெகாவாட் அளவுக்கு அதிகரிப்போம். இந்தியாவில் நாங்கள் எங்களது போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றி வருகிறோம். மேலும் பெட்ரோல், டீசலில் கலக்கும் உயிரி எரிபொருள் விகிதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் வெளியேறும் கார்பன் அளவை குறைப்பதற்காக சுவீடன் நாட்டுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கமாக நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். இது உலகளவில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஐ.நா. கட்டிட மேற்கூரையில் சூரியசக்தி தகடுகளை இந்தியா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறது. இதுபோன்ற திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அதிக உயரத்துக்கு கொண்டுசெல்லும் என கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *