Tamilசெய்திகள்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட்காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தீர்மானித்தது.

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முடிவை மேற்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் தெலுங்கானா சட்டசபைக் கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடக்கும் தேதிகளை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 20-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் ஆகியவற்றில் கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

ராஜஸ்தான்(200 தொகுதிகள்), தெலுங்கானா(119) ஆகியவற்றில் வருகிற 7-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டனர்.

தெலுங்கானாவில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் பல்வேறு தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் ராம்கார்க் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங்(வயது 62) என்பவர் இறந்து விட்டதால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

7-ந்தேதி நடைபெறும் தேர்தலையொட்டி இப்போதே இந்த 2 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் குவிக்கப்படுகின்றனர். மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் பணி இன்று முழு வீச்சில் தொடங்குகிறது.

ஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

5 மாநில சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக் கான அரையிறுதி போட்டி என்று வர்ணிக்கப்படுகிறது.

இதனால் இந்த தேர்தலை பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *