Tamilசெய்திகள்

மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் பதவி! – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விண்ணப்பம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் செல்லதுரை நியமிக்கப்பட்டார். அவர் நியமனத்தில் தவறு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை நீக்கம் செய்து கடந்த ஜூன் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்பிறகு யாரும் துணைவேந்தராக நியமிக்கப்படவில்லை. அங்கு துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதற்கான தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அனுப்ப கடைசி நாளாகும். இதைத்தொடர்ந்து விண்ணப்பம் செய்தவர்களின் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 196 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிரபல விஞ்ஞானிகள், கல்வித்துறை வல்லுநர்கள் என பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள். பிரபல இஸ்ரோ விஞ்ஞானியும் மங்கள்யான், சந்திராயன் விண்வெளி திட்டத்திற்கு இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரையும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் இருந்து கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பத்திருக்கிறார்.

இவர் தவிர நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா வம்சாவழியை சேர்ந்த மலேசியா பேராசிரியர், திருவனந்தபுரம், ஐதராபாத், ஆந்திரா, புதுவை, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பலரும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இவர்களை தேர்வு செய்வதற்காக தனியாக தேர்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டி.கே. ஓஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் 3 மாதத்திற்குள் விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்து இறுதி அறிக்கையை கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு கவர்னர் துணைவேந்தரை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *