Tamilசெய்திகள்

மசூதியில் நடந்த இந்து திருமணம்! – முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து

கேரள மாநிலம் ஆலப்புழை அருகே செருவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதி உள்ளது. அங்கு, அரிய நிகழ்வாக, இந்து மத சடங்குகளுடன் ஒரு இந்து திருமணம் நடந்தது. மணப்பெண் அஞ்சு, மணமகன் சரத் இருவருமே இந்துக்கள்தான். மணப்பெண் அஞ்சு, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். அதனால், தன் மகள் திருமணத்தை நடத்தி வைக்குமாறு செருவல்லி ஜமாத் கமிட்டியிடம் அஞ்சுவின் தாயார் உதவி கோரினார். அதை மசூதி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அத்துடன், மணமகளுக்கு 10 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்கமும் பரிசாக கொடுத்தது.

நேற்று செருவல்லி முஸ்லிம் ஜமாத் மசூதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதற்காக மசூதி நன்கு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு இருந்தது. புரோகிதர் முன்னிலையில், மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்து மத சடங்குகளுடன் திருமணம் நடந்தேறியது. இந்து-முஸ்லிம் இருதரப்பினரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். மசூதி வளாகத்திலேயே சைவ விருந்து நடைபெற்றது. சுமார் ஆயிரம் பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இந்த திருமணத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமண புகைப்படத்தை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டதுடன், கேரள மாநிலம் மத நல்லிணக்கத்துக்கு எப்போதும் உதாரணமாக திகழ்வதாக அவர் கூறியுள்ளார். மேலும், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் நேரத்தில் இந்த திருமணம் நடந்துள்ளதாகவும், கேரளா எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *