போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கட்! – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இவர்களது போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

அதன் பின்னரும் அரசு கோரிக்கைகள் பற்றி இதுவரை எந்தவிதமான முடிவையும் தெரிவிக்காததால் கோர்ட்டில் கொடுத்த உத்தரவை ஜாக்டோ- ஜியோவினர் திரும்ப பெற்றதோடு மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் 22-ந்தேதி முதல் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

திருச்சியில் நடந்த உயர்மட்ட குழுவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டனர்.

அதன்படி நாளை 22-ந்தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ந்தேதி மறியல் போராட்டமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நாளை முதல் தொடங்குவதால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் ஒரு பிரிவினர் கலந்து கொள்ளவில்லை.

என்.ஜி.ஒ. சங்கம், தலைமை செயலக சங்கம், ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் பங்கேற்காததால் ஜாக்டோ- ஜியோவின் வேலை நிறுத்தம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியும்.

ஆனால் அரசுக்கு எதிராக நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் முதல் நாளில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறும் மறியல் போராட்டங்களில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் குறித்து அன்பரசு மேலும் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு சட்டசபையில் 110-வது விதியின்கீழ் ஒரு கமிட்டி அமைத்தார். 3 வருடமாகியும் அந்த கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யாமல் காலம் கடத்தி வந்தது. தற்போது தான் அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. அ.தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக இதனை அறிவித்தது. ஆனால் இதுவரையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை பரிசீலிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். ஆர்ப்பாட்டம், மறியல் என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடையும். 25-ந்தேதிக்குள் அரசு தனது முடிவினை தெரிவிக்கவில்லை என்றால் 26-ந்தேதி மீண்டும் உயர்மட்டக்குழு கூடி அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் பணிக்குவராத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வேலை நிறுத்த நாட்களில் மாவட்ட வாரியாக பணிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும், பிளஸ்-2 மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ந் தேதி முதல் செய்முறை தேர்வும் நடைபெறுகிறது.

ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என்பதால் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு உடனே அரசு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அரசு மாற்று ஏற்பாட்டினை செய்து வருகிறது. தொடக்கப் பள்ளிகள்தான் பெருமளவு பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை கொண்டு பள்ளிகளை திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *