Tamilசெய்திகள்

புத்தாண்டையொட்டி திருப்பதியில் 2 நாட்கள் சிறப்பு தரிசனம் ரத்து!

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் இந்த 2 நாட்கள் முழுவதும் ரத்து செய்வதாக திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆங்கில புத்தாண்டையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இன்று முதல் 2 நாட்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 6,7-ந்தேதிகளில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக நாராயணகிரி பகுதியில் வரிசையில் வர தனி ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்கும் தர்ம தரிசன டோக்கன், திவ்ய தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்கள் மூலம் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஜனவரி 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். சாதாரண பக்தர்கள் காலை 5 மணிக்கு பின்னர் சாமியை தரிசனம் செய்யலாம்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி 5-ந்தேதி 24 மணி நேரமும் மலைப்பாதை திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மலைப்பாதை உட்பட பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 11 மணிக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று முதல் இன்று காலை வரை 71 ஆயிரத்து 128 பேர் சாமி தரிசனம் செய்தனர். 21 ஆயிரத்து 978 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.35 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *