Tamilசெய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை!

புத்தாண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்க சென்னை நகரம் தயாராகி வருகிறது.

வருகிற 31-ந்தேதி இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை சாலை விடுதிகள், பண்ணை வீடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளின் நடனங்கள் உள்ளிட்ட ஆடல், பாடல் என கோலாகல கொண்டாட்டங்கள் இடம் பெறும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இளைஞர்கள் உற்சாக வெள்ளத்தில் குதிப்பார்கள். பைக்ரேஸ் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மது போதையில் வரம்பு மீறும் சில இளைஞர்கள் – இளம்பெண்களும் உண்டு.

புத்தாண்டு குதூகலமும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியை தருவதாக இருக்க வேண்டும். விபரீதங்களுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது. உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் கவனமாக உள்ளனர். இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

புத்தாண்டையொட்டி, போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களைகண்டு பிடிப்பதற்காக சென்னை நகரில் 500-க்கும் அதிகமான இடங்களில் வாகன தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.

வாகனங்களை நிறுத்தி அதில் வருபவர்கள் குடித்திருக்கிறார்களா என்பதை கண்டறிய உள்ளனர். ஓட்டல்களில் நடைபெறும் மது விருந்துகளில் பங்கேற்போர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க கூடாது அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று ஓட்டல்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

31-ந்தேதி இரவு சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை பகுதியில் கூடி புத்தாண்டு விழாவை கொண்டாடுவோரை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிகமாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மெரினா கடற்கரையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாட இருக்கிறார். அவர் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் தினகரன், பிரேமானந்தசின்கா மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பெண்களிடம் சில்மி‌ஷம் செய்பவர்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ஹேப்பி நியூ இயர்’ என்று பெண்களிடம் கை கொடுத்து கலாட்டா செய்பவர்களை கண்டு பிடிக்க பெண் போலீசார் மாறுவேடத்தில் வலம் வர உள்ளனர்.

மெரினா கடற்கரையில் கடல் பகுதிக்கு சென்றால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அங்கு கடலோர பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. எல்லை மீறுபவர்களை தடுக்க குதிரைப்படை போலீசார் கடற்கரை பகுதியில் வலம் வர உள்ளனர்.

கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் வழி தவறி சென்று விடக்கூடாது என்பதால் அவர்களுக்கு போலீசார் அடையாள வளையங்களை அணிவிக்க உள்ளனர். இதில் அவசர போலீஸ் போன் நம்பர், பெற்றோரின் போன் நம்பர் கொண்ட அட்டையும் இருக்கும்.

இதன் மூலம் வழி தவறிய குழந்தைகளை உடனே உரியவர்களிடம் ஒப்படைக்க முடியும். தரையிலும் செல்லும் வாகனங்களையும் போலீசார் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு இரவில் சென்னை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நகரில் 35 போலீஸ் வாகனங்கள் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளன. புத்தாண்டு பாதுகாப்பு பணியில் மொத்தம் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினம் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், சென்னை நகர மக்கள் எந்தவிதமான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தயாரித்துள்ளனர். இதுபற்றிய போலீசாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *