Tamilசெய்திகள்

பீகார் சட்டசபை தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில் சந்திப்போம் – பா.ஜ.க அறிவிப்பு

பீகாரில் 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து பாரதிய ஜனதாவுக்கு எதிராக போட்டியிட்டன.

இதில் மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இடம் பெற்றது.

ஆனால் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து பிரிந்தார். அப்போது பாரதிய ஜனதா ஆதரவு அளித்தது. இதன் மூலம் ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர்ந்தது. அதில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளித்தார். ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு மந்திரி பதவி மட்டும் தான் வழங்கினார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடைசி நேரத்தில் மந்திரி பதவி ஏற்க கட்சி மறுத்துவிட்டது.

இதன் காரணமாக பாரதிய ஜனதாவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையே பீகார் மாநில போலீஸ் ஸ்பெ‌ஷல் பிராஞ்ச் தலைமையகத்தில் இருந்து அனைத்து மாவட்ட தலைமை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா சார்பு மத இயக்கங்களில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள், அவர்களுடைய முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

பாரதிய ஜனதா ஆதரவு இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தான் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் இது முதல்-மந்திரிக்கு தெரியாமல் நடந்து விட்டதாக தகவல் வெளியானது.

மேலும் இதுசம்பந்தமாக விசாரணை நடத்தவும் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். ஆனாலும் பாரதிய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் பலரும் ஐக்கிய ஜனதா தளத்தை விமர்சித்து வந்தன.

பாரதிய ஜனதா எம்.எல்.சி. சச்சிதானந்தா ராய் ஐக்கிய ஜனதா தளத்தை கடுமையாக விமர்சித்தார். அதற்கு ஐக்கிய ஜனதா தலைவர்களும் பதிலடி கொடுத்தனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது 2020-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை நிதிஷ் குமார் தலைமையில் சந்திப்போம் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான சுசில்குமார் மோடி அறிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தில் விவாதத்தில் பேசிய அவர் பீகாரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் ஓட்டளிப்பார்கள். தேர்தல் கூட்டணி சம்பந்தமாக யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மூழ்கு கிற படகில் யாரும் பயணம் செய்யமாட்டார்கள். நிதிஷ் குமார் தலைமையில் சட்டசபை தேர்தலை நாம் சந்திப்போம் என்று கூறினார்.

இதனால் பீகாரில் பாரதிய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *