Tamilசெய்திகள்

பாகிஸ்தான் மீது கோபம் கொண்ட ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதர்!

உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.2 லட்சம் கோடி) இதுபோல் நிதியாக வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி டிரம்ப் இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாகவே கண்டித்தார். பாகிஸ்தான் நம்மிடம் ஏராளமான பொய்களை கூறி மோசடி செய்துவிட்டது என்றும் அவர் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் உள்ள டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கான பல பில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.நா. வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியதாவது:

நாம் எந்த நாட்டுடன் எதற்காக கூட்டணி அமைத்துள்ளோமோ அதுபற்றி முறையாக சிந்தித்து செயல்பட வேண்டும். சில விஷயங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதற்காக இரு நாடுகளும் ஒருங்கிணைய வேண்டும். அப்படி இல்லாமல் இணைந்து செயல்படுவதாக கூறிக்கொண்டு, அந்த நாட்டுக்கு கண்மூடித்தனமாக பணத்தை வாரி இறைப்பதில் பயன் இல்லை.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு நாம் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர்களை(ரூ.9 ஆயிரம் கோடி) நிதியாக கொடுத்தோம். இதுபோல் 15 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானுக்கு நிதி அளிக்கப்பட்டது. ஒரு பில்லியன் டாலர் என்பது சாதாரண தொகை அல்ல. அதன் மூலம் எத்தனையோ நல்ல செயல்களை செய்ய முடியும்.

மாறாக நாம் வழங்கிய நிதியை வைத்துக்கொண்டு பயங்கரவாதிகளை உருவாக்கி நம்முடைய வீரர்களையே அவர்கள் கொல்கின்றனர். தொடர்ந்து பயங்கரவாதிகளின் கூடாரமாகத்தான் பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. எனவே பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை பாரபட்சமின்றி ஒடுக்கும் வரையில் அவர்களுக்கு 1 டாலர் கூட நிதி உதவி வழங்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *