பாகிஸ்தான் – இந்தியா இடையே யுத்தம்? – கவலை தெரிவித்த வைகோ

திருச்சியில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களில் முஸ்லிம் ஒருவரும் ஆவார். உணர்ச்சிகளை தூண்டி எரிமலை போல் ஆக்கக்கூடாது. இந்த சம்பவங்களால் 2 நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படும் நிலை உருவாகுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்.

அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள். பாசிச கொள்கை அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

மாயமான சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் நாளை நடைபெறும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும். அவரை யாராவது சிறைப்பிடித்தால் உடனே விடுவிக்க வேண்டும். காவல் துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறிய நிலையில் அவர் மாயமாகி இருப்பதால் காவல் துறையினர் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசும், காவல் துறையும் தான் பொறுப்பு.

பிரதமர் நரேந்திர மோடி 1-ந்தேதி கன்னியாகுமரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வருகை தந்தால் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்க நரேந்திர மோடி வரவில்லை. முல்லை பெரியாறு, மேகதாது அணைக்கு அனுமதி அளித்துள்ளார். தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் மீது எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதால்தான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கே: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதே?

ப : அது குறித்த முழு தகவல் எனக்கு தெரியவில்லை. தகவல் தெரிந்த பிறகுதான் அது பற்றி கருத்து கூற முடியும். இருப்பினும் எந்த நிலையிலும் யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி விடக்கூடாது. இதனால் இரு தரப்புக்கும் பெரும் சேதம் ஏற்படும்.

கே: தி.மு.க-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளாரே?

ப : அரசியல் தலைவர்கள் சொல்லும் கருத்துக்கள்தான் பதில் கருத்துகளாக கூறப்படுகிறது.

கே: தேர்தல் பிரசாரத்தை எப்போது தொடங்குவீர்கள்?

ப: நான் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டேன்.

கே: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி விட்டதா?

ப: பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *