பாகிஸ்தானை போரில் வென்ற நாள் இன்று – இந்திய வீரர்களின் வீரத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், தன்னுடைய அமைப்பில் ஒரு புவியியல் அதிசயமாக திகழ்ந்தது. ஏனென்றால், இடையே இருந்த இந்திய நிலப்பரப்பு, மேற்கு பாகிஸ்தானையும், கிழக்கு பாகிஸ்தானையும் இரண்டாக பிரித்தது.

பின்பு, அவை தனித்தனி நாடாகவும் பிளவு பெற்றன. அதில் பிரசவமானதுதான், வங்காளதேசம். ஆனால், இது சுகப்பிரசவமாக அரங்கேறவில்லை.

கடந்த 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் தேசிய தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 300 இடங்களில் 162 இடங்களை தனதாக்கியது. ஆனால், ஷேக் முஜிபுர் ரகுமானுக்கு பதவியை விட்டுத்தர அப்போதைய பாகிஸ்தான் ஆட்சியாளர் யாஹ்யா கான் தயாராக இல்லை.

ஏற்கனவே கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையே ஆழமான அவநம்பிக்கையும், தீவிர வெறுப்புணர்வும் நிலவி வந்தது. ஏராளமான வங்காள மொழி மாணவர்கள் உருது மொழி திணிப்பை எதிர்த்து தங்களின் இன்னுயிரை தியாகம் செய்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், ஷேக் முஜிபுர் ரகுமானுக்கு பதவி மறுக்கப்பட்டது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போன்ற விளைவை தந்தது. ஒட்டுமொத்த கிழக்கு பாகிஸ்தானும் கிளர்ந்து எழுந்தது. அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட பாகிஸ்தான் அரசு ஷேக் முஜிபுர் ரகுமானையும் கைது செய்தது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறைக்கு தப்பி ஆயிரக்கணக்கானோர் பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

வெகுசில நாட்களிலேயே அகதிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது. அகதிகள் முகாம்களை பார்வையிட்ட அந்நாள் பிரதமர் இந்திரா காந்தி, பேரதிர்ச்சியுடன் காணப்பட்ட அகதிகளின் நிலை கண்டு கண்கலங்கினார்.

நிர்க்கதியாய் நின்ற அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் வழங்க உத்தரவிட்டார். கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரம் கோரி போராடிய ‘முக்திவாஹினி’ புரட்சிப் படையினருக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியது.

‘இங்கு நடந்துகொண்டிருப்பதை உலக சமுதாயம் அறிந்துகொள்ள வேண்டும். உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பாகிஸ்தான் நடத்தும் இனப்படுகொலையை தொடர இனியும் அனுமதிக்க முடியாது’ என இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி முழங்கினார்.

மேலும், ‘பாகிஸ்தானின் நடவடிக்கை அகதிகளின் வருகை மூலமாக இந்தியாவுக்கு தாங்க முடியாத பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. இதை ஏற்றுக்கொள்ள இயலாது.

பாகிஸ்தானும் உலக சமுதாயமும் இணைந்து கிழக்கு பாகிஸ்தானில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அப்போதுதான் அகதிகள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் சொந்தநாட்டுக்கு திரும்ப முடியும்’ என்றும் அறைகூவல் விடுத்தார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி டெல்லி மற்றும் முன்னணி எல்லை பகுதிகளில் உள்ள இந்திய விமான தளங்கள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

ஏற்கனவே 6 மாதங்களாக ஆயத்தமாகிக்கொண்டிருந்த இந்திய ராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய இந்திரா உத்தரவிட்டார். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. கராச்சி துறைமுகம் இந்திய போர்க்கப்பல்களால் முற்றுகையிடப்பட்டது.

13 நாட்கள் நீடித்த இந்தப் போரின் இறுதியில் நியாசி தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம், 16-12-1971 அன்று டாக்காவில் இந்தியாவிடம் சரண் அடைந்தது. அன்று முதல் வங்காளதேசம் சுதந்திர நாடானது. அன்றே அந்த நாட்டை இந்தியா அங்கீகரித்தது. 1973-ல் வங்காளதேசத்தை அமெரிக்காவும் அங்கீகரித்தது.

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி ஆண்டுதோறும் ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 90 ஆயிரம் வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதியை மண்டியிட வைத்த ‘விஜய் திவாஸ்’ நாளான இன்று இந்திய வீரர்களின் தீரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’விஜய் திவாஸ் தினமான இன்று நமது வீரர்களிம் துணிச்சல் மற்றும் வீரதீரத்துக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இன்றைய நாளில் நமது படைவீரர்கள் உருவாக்கிய வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *