Tamilசெய்திகள்

பயங்கரவாதிகள் ஊடுருவல்! – பெங்களூரில் உச்சக்கட்ட பாதுகாப்பு

கர்நாடகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் முடிவடைந்த போதிலும் பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைபடி பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள பஸ், ரெயில், விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதே நிலை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பெங்களூரு நகரில் உள்ள விதானசவுதா, விகாசசவுதா, கர்நாடக ஐகோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விதானசவுதா, விகாச சவுதாவுக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மெஜஸ்டிக்கில் உள்ள சிட்டி ரெயில் நிலையம், பி.எம்.டி.சி மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் ரெயில்களில் மோப்பநாய்கள் மற்றும் ‘மெட்டல் டிடெக்டர்‘ கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் தான் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திலும் பாதுகாப்பு பணியில் அதிகமான போலீசார், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்களில் வரும் பயணிகளையும், அவர்களது உடமைகளையும் போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

இதுதவிர பெங்களூரு நகரில் உள்ள வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்துடன் சாலைகளில் போலீசாருடன் சேர்ந்து ‘கருடா’ படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரு நகரில் பாதுகாப்பு பணியில் போலீசார், கர்நாடக ரிசர்வ் படை போலீசார், நகர ஆயுதப்படை போலீசார், ‘கருடா’ படையினர், ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர மைசூரு, மண்டியா, தட்சிணகன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, பெலகாவி, விஜயாப்புரா உள்பட மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகம்-தமிழக எல்லை, கர்நாடகம்-மராட்டிய எல்லை, கர்நாடகம்-ஆந்திரா எல்லை, கர்நாடகம்-கேரள எல்லைகளிலும் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *