நியூட்ரினோ திட்டத்தை கைவிடுங்கள் – பாராளுமன்றத்தில் வைகோ பேச்சு

ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ இன்று மாநிலங்களவையில் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.

இந்த நியூட்ரினோ திட்டத்தால் உலகின் தொன்மையான கடினப் பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கடுமையான சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட இருக்கின்றது.

இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை, ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ பண்பாட்டு மையம் உலக பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.

இங்கே சுரங்கம் தோண்டும் போது, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். அதேபோல, பென்னி குயிக் கட்டிய தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்.

இந்த நியூட்ரினோ திட்டம் 7000 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமெரிக்காவில் உள்ள பெர்னி என்ற ஆய்வுக் கூடத்துடன் இணைக்கப்படுகின்றது. மேலும் இந்த ஆய்வகத்தில் அணுக் கழிவுகளை வைத்து பாதுகாக்கப் போகின்றோம் என்று இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை நான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது, அது எழுத்துப் பிழை என்று மத்திய அரசு சொன்னது. இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து வாதாடினேன். அப்போது, இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள உச்சநீதி மன்ற, மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினேன்.

எனவே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ம் நாள் மதுரை உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து இருக்கின்றது.

அதேபோல, பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தடை ஆணை பெற்று இருக்கின்றது.

இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும்.

எனவே, நாகசாகி ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் முதன்மையான தாக்குதல் மையமாகத் தமிழ்நாடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.

கேரள மாநில முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி ஆகியோர் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர்.

எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு இந்திய அரசை வலியுறுத்துகின்றேன்.”

இவ்வாறு வைகோ பேசினார்.

கேரள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். வைகோவின் கருத்தை நாங்களும் ஆதரிக்கின்றோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *