Tamilசெய்திகள்

நாட்டில் அராஜகம் பெருகிவிட்டது – மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த கருத்தை உள்துறை மந்திரி அமித்ஷாவும் நேற்று உறுதிபட தெரிவித்தார்.

குஜராத் மாநில போலீசாருக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளிடம் தற்போது வேறு எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் நாட்டில் அராஜகம் பெருகிவிட்டது.

வெளிநாடுகளில் துன்பப்படும் மத சிறுபான்மையினர் தங்களை பாதுகாத்துக்கொள்ள அவர்களாகவே இந்தியா வருகிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என நினைத்து, அந்த குடியேறிகளுக்கு முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோகும் என ராகுல் காந்தி, மம்தா, கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். ஆனால் இந்த சட்டத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான விதிகள் இருந்தால் நிரூபிக்க முடியுமா? என நான் அவர்களுக்கு சவால் விடுக்கிறேன்.

இந்த சட்டத்துக்கு எதிராக பரப்பப்படும் பொய்களை அகற்றுவதற்காக வீடு வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பா.ஜனதா தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். உண்மையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய அதிகாரம் நம்மிடம் இருக்கிறது. நமது பிரசாரத்தால் குடியுரிமை திருத்த சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்வர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டால் அங்கு ரத்தக்களரி ஏற்படும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினர். ஆனால் அங்கு எந்த வன்முறையும் ஏற்படவில்லை. அதில் யாரும் பலியாகவும் இல்லை. வன்முறை ஏற்படும் எனக்கூறிய தலைவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *