Tamilசினிமா

நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை – இயக்குநர் பா.ரஞ்சித்

சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:

“சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.

மக்கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.

வெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு… என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *