Tamilசெய்திகள்

தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார் – கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் நகர்ப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 23-ந் தேதி தெரியும்.

சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்த வில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டுவருகிறார். கட்சியினரை ஏமாற்றி அரசியல் நடத்தி வருகிறார்.

சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்.

நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் தான். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வேண்டும் என்று வாதாடியது நளினி சிதம்பரம் தான். அ.தி.மு.க. அரசுக்கும், முதல்வருக்கும் தான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறுவதற்கு அருகதை இருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் நாங்கள் பங்கு பெற உள்ளோம். அப்போது இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.

தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி ராஜாவாக இருப்பார். ஸ்டாலின் கூஜாவாக இருப்பார். தேர்தல் கமி‌ஷனுக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது ஒரு தன்னிச்சையான அமைப்பு.

தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மொத்தத்தில் தினகரன் கட்சியினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கடைசியில் தினகரன் பணநாயகம் வென்றது என்று கூறிவிட்டு செல்வார்.

இறுதியில் ஒருவர் டெபாசிட் இழப்பார். ஒருவர் டெபாசிட் வாங்குவார். ஆனால் வெற்றி பெறுவது அ.தி.மு.க. கூட்டணி தான். முதல்வர் துணை முதல்வர் பிரசாரத்தில் இருப்பதால் சென்னை சென்றவுடன் 4 தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்.

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மக்கள் அலை அரசுக்கு எதிராக இல்லை. இந்த அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *