Tamilசெய்திகள்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து!

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *