திருப்பதியில் தரிசனம் செய்த ராஜபக்சே

இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜபக்சே ஏழுமலையான் தரிசனத்துக்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார்.

ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோது பலமுறை திருப்பதிக்கு வந்திருந்தார்.

அப்போது ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதியில் அவர் தங்கும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் மட்டுமே வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கும் வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக சிறப்பான முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலைஅடிவாரம் வரை ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வெல்கம் டு இந்தியா, தேங்ஸ் பார் யுவர் விசிட் என்ற வாசகங்களை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் தாங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இதுவரை இல்லாத வகையில் அவருக்கு ஆந்திர பாரம்பரிய நடமான குச்சிபுடி நடனத்துடன் ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜபக்சே அங்கிருந்து காரில் திருப்பதிக்கு சென்றார். திருப்பதி மலையில் தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இரவில் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ராஜபக்சே தங்கினார். இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை ராஜபக்சே தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

ராஜபக்சே வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலையில் அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வரை தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

2009-ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சி காலத்தில் தான் இலங்கை போரில் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் திருப்பதிக்கு ராஜபக்சே வரும் போது வழியில் அவருக்கு கருப்புக் கொடி காட்டும் சம்பவங்கள் நடந்து வந்தன.

இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் சிங்கள மக்கள் நாட்டை ஆளும் பொறுப்பை ராஜபக்சே குடும்பத்திடம் தந்து விட்டனர்.

இந்த நிலையில் திருப்பதி வந்த ராஜபக்சேவுக்கு ரத்தின கம்பள வரவேற்பு, பிளக்ஸ் பேனர் வாழ்த்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது காலம் மாறும் போது காட்சிகள் மாறத்தானே செய்யும் என்பதை பறைசாற்றும் வகையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *