Tamilசெய்திகள்

திமுக-வினர் மிரட்டுகிறார்கள் – கரூர் மாவட்ட கலெக்டர் புகார்

கரூரில் இன்று மாலை பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரம் நடக்கிறது. மனோகரா கார்னரில் இறுதிக்கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் தங்களுக்கு முதலில் வழங்கிய இறுதி கட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி கரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அதிகாரி சரவணமூர்த்தியை சந்தித்து முறையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விசாரணை நடத்தி காங்கிரஸ் வேட்பாளருக்கு அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கட்சியினர் திரண்டு சென்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர்.

இந்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இன்று கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களாக அதிகாரிகளுக்கு அதிகமாக அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று நள்ளிரவில் 12.45 மணிக்கு கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உத்தரவின்பேரில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் அறிவுரையின் பேரில் வக்கீல் செந்தில் என்பவர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் எனது வீட்டிற்கு வந்தார்.

மேலும் தகராறு செய்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டார்கள். நான் உடனே செந்தில் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். இறுதி கட்ட பிரசாரம் தொடர்பாக இன்று காலை அலுவலகத்திற்கு வந்து மனு கொடுங்கள் என்றேன். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர்.

நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே.

சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

இந்த அனுமதி விவகாரம் மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரான எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு. எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *