Tamilசெய்திகள்

தினம் தினம் உயரும் வெங்காயம் விலை! – கண்ணீர் விடும் பெண்கள்

உணவு தயாரிப்பில் என்றும் முக்கிய இடம் வகிப்பது வெங்காயம் தான். சாம்பார் என்றாலும் சரி, சட்னி என்றாலும் சரி வெங்காயம் இல்லாமல் ருசியை எதிர்பார்க்கவே முடியாது. வாய்க்கு ருசியாக பிரியாணி பரிமாறப்பட்டாலும் தொட்டுக்கொள்ள வைக்கப்படும் தயிர் வெங்காயத்தின் சுவையோ அலாதி தான். அந்த அளவு சாப்பாட்டில் தனி அங்கம் வகிப்பது வெங்காயம்.

ஆனால் தற்போது ‘வெங்காயம்’ என்றாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு அதன் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. 5 மாதங்களுக்கு முன்பு ரூ.6 வரை கூட ஒரு கிலோ வெங்காயம் விற்பனை ஆனது. அதன்பிறகு வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கியது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டிலேயே இந்த விலை என்றால் நமது தெருக்கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் சொல்லவா வேண்டும்? சாதாரண தெருக்கடைகளிலேயே வெங்காயத்தின் விலை ரூ.70-ஐ தொட்டிருக்கிறது. இவ்வளவு விலையா? என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, ‘எம்மா…. இஷ்டம் இருந்தா எடு… வித்துடுச்சுனு கோவிச்சுக்காத…’ என்று கடைக்காரர் சொல்வது இன்னும் தவிக்க வைத்து விடுகிறது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் பல்லாரி வெங்காயத்தை கிலோ வாரியாக கூறுகட்டி ரூ.55-ல் இருந்து ரூ.70 வரை விற்கிறார்கள். இதனால் இல்லத்தரசிகள் உச்சக்கட்ட தவிப்பில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் அக்கம்பக்கத்து வீடுகளில் பணத்தை கூட கடனாக வாங்கிவிடலாம், வெங்காயத்தை கடனாக கேட்க பயமாக இருக்கிறது. அந்த அளவு வெங்காயத்தின் விலை இருக்கிறது. இப்போதெல்லாம் சாப்பாட்டில் வெங்காயத்தை சேர்க்கவேண்டும் என்று நினைக்கும்போதே கண்ணீர் வருகிறது.

இப்போதைய நிலையை கணக்கிடுகையில் எப்படியும் விரைவில் வெங்காயத்தின் விலை சதம் அடித்தாலும் ஆச்சரியம் இல்லை. எனவே 5 கிலோ அல்லது 10 கிலோ வெங்காயத்தை மொத்தமாக வாங்கிடலாம் என்று யோசிக்க தோன்றுகிறது. எப்போது இந்த நிலை மாறி வெங்காயம் விலை குறையும் என்று உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *