Tamilசெய்திகள்

தமிழ் மொழி குறித்த தவறான பாடப் பகுதி நீக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்

1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வி துறை மாற்றி அமைத்தது. கடந்த கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 ஆகிய வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, புத்தகங்களும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

இந்தநிலையில் ஒரு சர்ச்சை வெளியாகி இருக்கிறது. அதாவது, பிளஸ்-2 ஆங்கில பாடபுத்தகத்தில் 142-ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று இருந்தது.

அதில், தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பறைசாற்றி வரும் நிலையில், இந்த பதிவு பல்வேறு விதமான எதிர்ப்புகளை உருவாக்கிவிட்டது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

உலக மொழிகளுக் கெல்லாம் மூத்த மொழியாக நமது தாய் மொழி தமிழ் விளங்குகிறது. பிளஸ்-2 பாட புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழியான தமிழின் தொன்மையை விளக்கி மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *