Tamilவிளையாட்டு

டெஸ்ட் தொடரை வென்றது எனது மிகப்பெரிய சாதனை – விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.

2011-ல் உலக கோப்பையை வென்றபோது நான் இளம் வீரராக இருந்தேன். அப்போது மற்ற வீரர்களின் உத்வேகத்தை பார்த்தேன்.

தற்போது தொடரை வென்ற இந்திய அணி அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த வீரர்கள் சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

நான் கேப்டனாக பொறுப்பேற்று 4 ஆண்டில் இந்த சாதனையை படைத்து இருக்கிறேன். இதற்கு வீரர்களின் செயல்பாடுதான் காரணம். இந்த வீரர்களுக்கு நான் கேப்டனாக இருப்பது பெருமை அளிக்கிறது. உண்மையிலேயே இது மிகுந்த மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும்.

இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. புஜாராவின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. அவர் மிகவும் சிறப்புக்கு உரிய வீரர் ஆவார்.

இதேபோல மெல்போர்ன் டெஸ்டில் புதுமுக வீரர் அகர்வால் தனது திறமையை வெளிப்படுத்தியது சிறப்பானது. ரிசப்பந்தும் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். வேகப்பந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனைகளை முறியடித்து அபாரமாக வீசினார்கள். குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்நாயகன் விருது பெற்ற புஜாரா கூறியதாவது:-

நான் இடம்பெற்றுள்ள சிறந்த இந்திய அணி இதுவாகும். டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளோம். ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது என்பது எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை பாராட்டுகிறேன்.

4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல். எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள். இது உண்மையிலேயே வியக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *