டெல்லி மக்கள் போலியான வாக்குறுதிகளுக்கு ஏமாந்து போகிறார்கள் – பிரதமர் மோடி தாக்கு

டெல்லியில் அனுமதி பெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முறைப்படுத்தி பட்டா வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம் என குறிப்பிட்டார்.

நாட்டின் தலைநகரான டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அனுமதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

எவ்வித அனுமதியும் இல்லாமல் இப்படி கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் நடவடிக்கைகளை டெல்லி அரசு அவ்வப்போது எடுத்து வந்தது. இதற்கு எதிராக மக்கள் வழக்கு தொடர்வதும், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவிப்பதும் தொடர்கதையாக இருந்தது.

இப்படிப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எல்லாம் முறைப்படுத்தி அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

நவம்பர் மாதம் தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

மேற்கண்ட 1,797 குடியிருப்பு பகுதிகளும் குறைந்த வருமானத்தினர் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. வசதி படைத்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் இந்த வரையறைக்குள் வராது.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்ற நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் அனுமதி பெறாத குடியிருப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்கும் விழாவில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம்’ என குறிப்பிட்டார்.

இவ்விழாவில் மோடி பேசியதாவது:-

நீங்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்களுக்கு ஏதும் செய்யவில்லை. மாறாக, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சுமார் 2 ஆயிரம் ஆடம்பர பங்களாக்களை அளித்தனர். என்ன கைமாறு கருதி அவர்களுக்கு பங்களாக்கள் அளிக்கப்பட்டன என்பது யாருக்கும் தெரியாது.

நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் டெல்லியில் வாழும் பெரும்பாலான மக்கள் போலி தேர்தல் வாக்குறுதிகளுக்கு மயங்கி ஏமாந்துப் போனார்கள். அனுமதி பெறாத குடியிருப்பு மற்றும் வீடுகளுக்கு சீல் வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளில் சிக்கி பலர் வேதனைப்பட்டனர்.

இப்படி தவித்த 40 லட்சம் மக்களின் வசிப்பிடங்களை நிரந்தரப்படுத்தி புதிய விடியலை ஏற்படுத்தித்தரும் வாய்ப்பு எனக்கும் பாஜக அரசுக்கும் கிடைத்திருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *