Tamilவிளையாட்டு

டெல்லியில் காற்றுமாசு பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை – ரோகித் சர்மா

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் வருகிற 3-ந் தேதி டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது.

தற்போது டெல்லியில் காற்று மாசு நிலவுகிறது. தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசுகளும், விவசாய கழிவுகளை கொளுத்துவதாலும் காற்றின் மாசு மிக அதிகமாகி விட்டது.

இதனால் முதல் 20 ஓவர் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதே கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வலியுறுத்தினார்.

ஆனால் டெல்லியில் முதல் 20 ஓவர் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

இதற்கிடையே வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது லிட்டன் தாஸ் முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, “ டெல்லியில் 3-ந் தேதி போட்டி நடக்கும் என்பதை அறிவேன். இதனால் அங்கு விளையாடுவோம். இதற்கு முன்பு டெல்லியில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி போது எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அதுபற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. டெல்லியில் காற்றுமாசு பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

கேப்டன் பதவி என்பது நமது கையில் இல்லை. ஒரு ஆட்டமோ அல்லது 100 ஆட்டமோ கேப்டனாக இருப்பது கவுரவமாகும்.

நான் எவ்வளவு நாளுக்கு கேப்டனாக இருப்பேன் என்பதை பற்றி சிந்திக்க வில்லை. எப்போதெல்லாம் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கிறதோ அதை அனுபவித்து, வெற்றிக்காக விளையாடுகிறேன்.

வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். மற்றவர்களை நான் எதுவும் சொல்ல முடியாது.

இதற்கு முன்பு துலீப் டிராபியில் ஒருமுறை இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடி இருக்கிறேன். அது நல்ல அனுபவமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *