Tamilசெய்திகள்

டி.கே.சிவக்குமார் கைதுக்கு சாதி சாயம் பூசுவது சரியா? – சதானந்த கவுடா கேள்வி

டி.கே.சிவக்குமார் கைதுக்கு சாதி சாயம் பூசுவது சரியா? என்று கேள்வி எழுப்பிய மத்திய மந்திரி சதானந்தகவுடா, ஒக்கலிகர் சமுதாயம் மத்திய அரசுக்கு எதிராக போராடியதாக கூறுவது வேடிக்கை என்று கூறியுள்ளார். மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அமலாக்கத்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு டி.கே.சிவக்குமாரை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது கைதுக்கு சாதி சாயம் பூசுவது சரியா?. போராட்டம் நடத்துவது என்பது அனைவரின் உரிமை. ஒக்கலிகர் சமுதாயத்தின் முக்கியமான தலைவர் என்று கருதப்படுபவரே, அந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த சூழ்நிலையில் ஒக்கலிகர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராடியதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதில் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, சவுமியா ரெட்டி, தினேஷ் குண்டுராவ் மற்றும் முன்னாள் எம்.பி. உக்ரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்களா?.

தாவணகெரேயில் புதிதாக உர உற்பத்தி தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அங்கு ரெயில் போக்குவரத்து மற்றும் தண்ணீர் வசதி இருக்கிறது. இதில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்ய கர்நாடக ‘மார்க்கெட்டிங் பெடரேஷன்‘ அமைப்பு முன்வந்துள்ளது. விரைவில் இந்த தொழிற்சாலை தொடங்கப்படும். அதே போல் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் உள்பட 4 இடங்களில் இத்தகைய உர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த 4 தொழிற்சாலைகளில் நாட்டிற்கு தேவையான அளவில் 27 சதவீத உரம் உற்பத்தி செய்யப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு விரைவில் நிதி உதவியை அறிவிக்கும். இதுகுறித்து மோடியின் கவனத்தை ஈர்த்துள்ளோம். கர்நாடகம் மட்டுமின்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களுக்கும் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை.

முதல்-மந்திரி எடியூரப்பா வெள்ள நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளார். வீடுகள் கட்டி கொடுப்பது, நிதி உதவி வழங்குவது என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *