ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் நேரடியாக பேச வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

டிசம்பர் 4 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கும் ஜாக்டோ – ஜியோ அமைப்பு நிர்வாகிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும், என்று பா.ம.க நிறுவனட் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து டாக்டர்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை ஜாக்டோ- ஜியோ அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு எந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே, பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்பதால், ஸ்ரீதர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக அழைத்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து, அதற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் போராட்டத்தைக் கைவிட செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *