Tamilசெய்திகள்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து – கமல்ஹாசன் பேச்சு

தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.

நேற்றிரவு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ‘நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன. இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவன்.

இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். சமநிலையோடு இங்குள்ள மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். நான் ஒரு நல்ல இந்தியன் என பெருமையுடன் அறிவிக்க விரும்புகிறேன்.

இந்த இடம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்லவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அது (தீவிரவாதம்) இங்கே தொடங்கியது.

அந்த கொலைக்கான (1948-ம் ஆண்டு காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது) விடையை தேடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்’ என குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டில் பிரபல தமிழ் வார இதழில் தொடர் கட்டுரை எழுதிய கமல்ஹாசன் இதேபோல், ‘இந்து தீவிரவாதம்’ தொடர்பான ஒரு கருத்தை குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரிடம் இருந்து கண்டனம் எழுந்தது.

தனது தமிழ் கட்டுரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டதாக அப்போது கமல்ஹாசன் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *