Tamilசெய்திகள்

சீனா சுரங்கத்தில் 80 மணி நேரத்திற்குப் பிறகு 13 பேர் உயிருடன் மீட்பு!

சீனாவின் தென்மேற்கே உள்ள சிச்சுவான் மாகாணத்தின் உள்ளது யிபின் நகரம். இந்நகரில் உள்ள சான்மசு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென வெள்ளநீர் புகுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்க ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். மேலும் சுமார் 30 ஊழியர்கள் காணாமல் போயினர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து சுரங்கத்தினுள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 13 மீட்புக் குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 251 வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சுரங்கத்தினுள் சிக்கியவர்களில் 13 ஊழியர்களை 80 மணி நேரம் தேடலுக்கு பின்பு மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கத்தினுள் உள்ள இரும்பு கம்பியை வீரர்கள் பலமாக தட்டினர். இதையடுத்து அப்பகுதியின் மறுமுனையில் இருந்தும் கம்பிகளை தட்டும் சத்தம் கேட்டு, பதில்கள் வரவும் மீட்புப்படை வீரர்கள் சென்று அங்கிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.

‘வெள்ள நீர் உட்புகுந்து விபத்து ஏற்பட்ட காரணத்தினால் மின்சாரம் தகவல் தொடர்பு சாதனங்கள், காற்றோட்டம் (ஆக்சிஜன் சப்ளை) போன்ற அனைத்து அமைப்புகளும் சேதமடைந்திருந்தன. விபத்து ஏற்பட்ட இடத்திற்கும், சுரங்க நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட தொலைவு சுமார் 10 கி.மீ ஆகும். தண்ணீரும் இடுப்பளவு இருந்ததால் மீட்புப்பணி உபகரணங்களுடன் நடந்து செல்ல மிகவும் கடினமாக இருந்தது’ என மீட்புப்படை வீரர் ஒருவர் தெரிவித்தார்.

சுரங்கத்தினுள் சிக்கியுள்ள எஞ்சிய நபர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *