Tamilசெய்திகள்

கேரளாவில் 6 பேர் கொலை வழக்கு – 1800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ஜோளி. ஜோளியின் கணவர் ராய் தாமஸ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் ராய்தாமஸ் உள்பட 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இதில் சந்தேகம் அடைந்த ராய்தாமசின் சகோதரர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ராய்தாமசின் மனைவி ஜோளி, சயனைடு கொடுத்து ராய்தாமஸ் உள்பட 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

சொத்து மற்றும் பணத்திற்காக கணவர் மற்றும் உறவினர்களை கொலை செய்ததாக ஜோளி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில் கணவர் மற்றும் உறவினர்களுக்கு உணவில் சயனைடு கலந்தும், சூப் மற்றும் காபியில் கலந்து கொடுத்தும் அவர்களை கொன்றதாக ஜோளி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஜோளியை கைது செய்தனர். அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த மேத்யூ, பிரஜிகுமார் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக கோழிக்கோடு புறநகர் எஸ்.பி. சைமன் தலைமையில் விசாரணை நடந்து வந்தது. ஜோளியை போலீசார் கொலை நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று சாட்சியங்கள் தயாரித்தனர்.

ஜோளியுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் அழைத்து விசாரித்தனர். விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று கோழிக்கோடு தாமரைச்சேரி முன்சிப் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார் அதனுடன் 246 சாட்சிகள் அளித்த விவரங்களையும் அது தொடர்பான 322 ஆவணங்களையும் இணைத்துள்ளனர்.

இதனுடன் 22 பொருள் சாட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது. ஜோளியின் முதல் கணவர் ராய்தாமஸ் கொலை தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. சைமன் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து கூடத்தாயி கொலை வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *