Tamilசெய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை திமுக தொடங்கியது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பேரணியில் பங்கேற்க தயாரானார்கள்.

ஆனால் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அத்துடன், பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. போராட்டத்தின் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்சிகளின் கடமை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பேரணி ஏதும் நடந்தால், அதனை ட்ரோன் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை எழும்பூரில் பேரணி செல்லும் பாதை முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த பேரணி புதுப்பேட்டை, ஆதித்தனார் சாலை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவடைகிறது. அங்கு, நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கண்டன உரையாற்ற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *