குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் ரயில் மறியல்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே இப்போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறுவதால், பதற்றமான பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்பங்கா மாவட்டம் லகரிசராய் ரெயில் நிலையத்திற்குள் திடீரென சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அங்கு நின்றிருந்த ரெயிலை புறப்பட விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பாட்னா ராஜேந்திர நகர் ரெயில் நிலையத்தில் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், இந்த சட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஜனவரி 22ம் தேதிக்குள் விரிவான விளக்க அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *