Tamilசெய்திகள்

குஜராத் கலவரத்துக்கு முன்னாள் முதல்வர் மோடி காரணமில்லை – விசாரணை குழு அறிவிப்பு

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் இருந்து கடந்த 2002-ம் ஆண்டு சபர்மதி ரெயில் மூலமாக கரசேவகர்கள் வந்து கொண்டிருந்த போது, கோத்ரா அருகே அந்த ரெயிலின் குறிப்பிட்ட இரு பெட்டிகளை ஒருகும்பல் தீ வைத்து எரித்தது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முக்கியமாக அகமதாபாத் நகரில் வெடித்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பலர் சிறுபான்மையின மக்கள். அவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் சூறையாடப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி தலைமையில் முன்னாள் குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி அக்‌ஷய் குமார் ஒருங்கிணைப்பில் விசாரணை ஆணையம் ஒன்ற அமைத்து அந்நாள் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

கலவரம் தொடர்பாக விசாரிக்கும் காலக்கெடு சிலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டில் அந்நாள் குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் அரசிடம் நானாவதி விசாரணை கமிஷன் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

சுமார் 5 ஆண்டுகளாக இந்த அறிக்கையின் விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குஜராத் சட்டசபையில் நானாவதி விசாரணை கமிஷன் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

9 தொகுதிகளாக சுமார் 1500 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை குஜராத் உள்துறை மந்திரி பிரதிப்சின்ஹ் ஜடேஜா தாக்கல் செய்தார்.

‘2002-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த கலவரங்கள் மாநில அரசு அல்லது மந்திரிகளின் ஆதரவுடனோ, தூண்டுதலினாலோ, பங்களிப்புடனோ நடந்ததாக நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை.

எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் போதுமான ஆயுதபலம் இல்லாததாலும் சில இடங்களில் கலவரக்காரர்களை போலீசாரால் கட்டுப்படுத்த இயலாமல் போனது. அகமதாபாத் நகரில் நிகழ்ந்த சாதிக்கலவரத்தை அடக்குவதற்கு தேவையான ஆர்வத்தையும் சக்தியையும் பயன்படுத்த போலீசார் தவறி விட்டனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். அல்லது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என இன்று தாக்கல் செய்யப்பட்ட நானாவதி கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *